டில்லி:

ஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடைபெற்று வந்த  21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த 11 நாட்களாக  நடைபெற்று வந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்  இன்றுடன் முடிவடைந்தது.

இந்த போட்டியில்  ஆஸ்திரேலியா 80 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.  59 வெள்ளிப் பதக்கங்கள் 59 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 198 பதக்கங்களை ஆஸ்திரேலிய அணி வென்றது. 

இங்கிலாந்து அணி 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களை வென்று இரண்டாவது இடம் பிடித்தது. 

இந்திய அணி 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது. 

அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளன.

இந்தநிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி உள்ளனர் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற ஒவ்வொரு  இந்திய வீரர், வீராங்கனைகளும் இந்தியாவை பெருமைப்படுத்தி உள்ளனர்.  அற்புதமான செயல்திறன் மூலம் நாட்டை பெருமைப்படுத்தி உள்ளனர். காமன்வெல்த்தில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி உள்ளனர்.

அவர்களின் வாழ்க்கை  அர்ப்பணிப்பு சக்தியை எடுத்துக்காட்டுகின்றன, மேலும் அவர்கள் வெற்றி பெற்ற வெற்றிகளின் உயரத்தை அடைவதற்கு எண்ணற்ற தடைகளை கடந்து அர்ப்பணிப்புடன் விளையாடி உயர்ந்த வெற்றியை பெற்றுள்ளனர்.

தற்போது காமன்வெல்த் போட்டியில் பெற்றுள்ள வெற்றி, விளையாட்டில் ஈடுபட மேலும் இளைஞர்களை ஊக்குவிக்கும்.  எல்லோருடைய வாழ்க்கையிலும் உடற்பயிற்சி முக்கியத்துவம் பற்றி பெரிய விழிப்புணர்வை இந்த விளையாட்டு போட்டியின் வெற்றிகள் ஏற்படுத்தும்   என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.