டில்லி:

நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தேர்தல் பிரசாரம் ஓய்வடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய கேதர்நாத் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இமயமலையில் உள்ள புக்ழ்பெற்ற கேதர்நாத் சிவன் கோயில்  பனி காரணமாக 6 மாதங்கள் மூடப்பட்டு இருந்தது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

இந்த கோவிலின் நடை பக்தர்களுக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக பாராளுமன்ற தேர்தலுக்கான  தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதமர் மோடி, நேற்றுடன் கடைசிகட்ட  பிரசாரமும்  ஓய்வடைந்துள்ள நிலையில், ஓய்வெடுக்க விரும்புவதாக கூறிய மோடி,   இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

இதையொட்டி, கேதர்நாத் செல்லும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது கேதர்நாத் கோவிலில்  வழிபாடு நடத்திய பின்னர்  ஹர்சில் பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் சென்று தீபாவளியை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.