பிரதமர் மோடி ஒடிசா வருகை –  மாவோயிஸ்ட்கள் மிரட்டல்

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்துக்கு பிரதமர் மோடி ஏப்ரல் 15 ம் தேதி வருகை தருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மாவோயிஸ்ட்கள் டோய்காலு ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டத்தின் டோய்காலு ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை வெடிகுண்டு வெடிக்கச் செய்தனர். மேலும் சரக்கு ரயில் ஒன்றின் இஞ்ஜினை அவர்கள் சேதப்படுத்தினர்.

இச்சம்பவத்தை அடுத்து இத்தடத்தின் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் இப்பகுதியில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மாவோயிஸ்ட்கள் விட்டுச் சென்ற வாசகங்களில், மோடி மற்றும் பட்நாயக் அரசுகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 
ஒரு சுவரொட்டியில் ஏப்ரல் 15-16 பிரதமர் மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு தொடர்பாக ரயில் நிலைய அதிகாரி எஸ்.கே.பரிதா கூறும்போது, சுமார் 15-20 மாவோயிஸ்ட்கள் ஆயுதங்களுடன் நேற்று இரவு 12.15 மணிக்கு ரயில நிலையத்துக்குள் நுழைந்தனர். ரயில்வே அதிகாரிகளை அப்புறப்படுத்தி விட்டு குண்டு வைத்தனர்.

இன்னொரு மாவோயிஸ்ட் குழு ரயில் நிலையத்துக்கு வந்த சரக்கு ரயிலை நிறுத்தி அதன் இஞ்சினை சேதப்படுத்தினர். பின்னர் அவர்கள் 2 மணிக்கு தப்பிச் சென்றனர்” என்றார். இச்சம்பவத்தை அடுத்து ரயில் நிலையத்துக்கு விரைந்த ராயகடா போலீஸ் உயரதிகாரி கே.சிவசுப்பிரமணி விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்.

டோய்காலு வழியாக செல்லும் இருப்புப் பாதைகள் பாதுகாப்பாக உள்ளன என்பது உறுதி செய்யப்பட்டதும், ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.