தும்கூர்:

ர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி, கர்நாடக மாநிலத்தில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று முற்பகல் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் என்ன கிடைத்தது என்று மக்களிடையே கேள்வி எழுப்பினார்.

 

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 12ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு பிரசாரம் சூடுபிடித்து உள்ளது.

பாரதியஜனதாவுக்கு ஆதரவாக  பாஜக தலைவர் அமித்ஷா கர்நாடகாவில் வீடு எடுத்து தங்கி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதுபோல பிரதமர் மோடியும் கடந்த 1ந்தேதி முதல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதுபோல காங்கிரஸ் வெற்றிக்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று முற்பகல் 11 மணி அளவில் பிரதமர் மோடி கர்நாடகாவில் உள்ள  தும்கூர் என்ற  இடத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் வறுமை கோடு விவகாரத்தை பயன்படுத்துகிறது என்றும், ஆனால், ஏழை தாய் ஒருவரின் மகன் பிரதமரான பின்னர், வறுமையை பற்றி பேசுவதை நிறுத்தி விட்டது. இனிமேலும் மக்களை முட்டாளாக்க முடியாது என அக்கட்சி புரிந்து கொண்டுள்ளது என்று கூறினார்.

மேலும், விவசாயிகள் பற்றியும், ஏழைகள் குறித்தும் காங்கிரசுக்கு  கவலை கிடையாது. அதன் காரணமாகவே கர்நாடக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார் என்றார். எனவே, கர்நாடகாவில் பா.ஜ.,க  வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது என்ற மோடி, கர்நாடகாவில் காங்கிரஸ் 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. எனினும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் என்ன செய்தது என்றும் கேள்வி எழுப்பினார்.