டெல்லி: 55ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்க தேசம் இடையே மீண்டும்  ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.  இந்திய பிரதமர் மோடி, வங்கதேச பிரதமர் ஹசீனா ஆகியோர் கூட்டாக ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து ரயில் சேவை தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடி, வங்காளதேச நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா  இடையிலான உச்சி மாநாடு  நேற்று காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அப்போது, இரு நாட்டு உறவுகள் குறித்தும், கொரோனா தொற்று குறித்தும்  இரு தலைவர்களும் மாநாட்டில் விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

மாநாட்டில் பேசிய, வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனா,  வங்காள தேசம் , தனது 50வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில்,  அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், மார்ச் 26, 2021 அன்று பிரதமர் மோடி டாக்கா வருகை  தர வேண்டும் என  அழைப்பு விடுத்ததாகவும், மோடி கலந்துகொண்டால், அது  1971 ஆம் ஆண்டின்  வங்க தேசத்தின் விடுதலைப் போரின் கூட்டு நினைவேந்தலின் மகுடமாக இருக்கும் என கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து,  பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் இணைந்து, இன்று ஹல்திபரி-சிலாஹதி ரயில் பாதையை தொடங்கி வைத்தனர்.  இந்த ரயில் பாதையானது, 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.