” பிரதமர் மோடி உலகின் மிக சிறந்த நடிகர் ” – தெலுங்கு தேச எம்.பி. கிண்டல்

பிரதமர் நரேந்திர மோடி உலகின் மிக சிறந்த நடிகர் என்று தெலுங்கு தேச எம்.பி. கூறியதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களவையில் நரேந்திர மோடி பேசியது இந்தி திரைப்படம் போல் இருந்தது என தெலுங்கு தேச எம்.பி.யான கேசினேனி சீனிவாஸ் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், மோடி உலகின் மிக சிறந்த நடிகர் என்றும் அவர் கூறினார்.

srinivas

கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேச எம்.பி.சீனிவாஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். காங்கிரஸ் கட்சியும் தன் பங்கிற்கு மத்திய அரசின் மீது நோட்டீஸ் அனுப்பியது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.

நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அனைத்து கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்த நிலையில் இரவு 9.15 மணிக்கு நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் அதிகாரப்பசி எதிர்கட்சியினருக்கு இருக்கிறது என்று கடுமையாக சாடினார். தொடர்ந்து 90 நிமிடங்கள் வரை அவர் தனது உரையை நிகழ்த்தினார்.

modi

இறுதியாக நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மத்திய அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிர்ப்பு தெரிவித்து 126 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன் காரணமாக சீனிவாஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் மக்களவையில் பேசிய சீனிவாஸ், “ பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 90 நிமிடங்கள் உரையாற்றினர். அவரது பேச்சு ஹிந்தி திரைப்படம் பார்ப்பது போன்று இருந்தது. அவர் சிறந்த பேச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார், உலகின் மிகசிறந்த நடிகர் என்றால் அது மோடி தான் “ என்று கூறினார்.

சீனிவாஸ் இவ்வாறு பேசியதற்கு பாஜகவின் எ.பி.க்கள், நிர்வாகிகள் என அனைவரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். சீனிவாசனை சபாநாயகர் சுமித்ரா மகாஜனும் கண்டித்தார்.