அயோத்தி: சுமார் 500 ஆண்டுகளாக நீடித்து வந்த ராமஜென்ம பூமி பிரச்சனை தீர்ந்த நிலையில், அங்கு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது.
முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே கட்டப்பட உள்ள வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி,  அயோத்தி நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது

ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுத்து உள்ளன.  இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை (புதன்கிழமை) கோலாகலமாக நடைபெறுகிறது.

இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள், கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் என பலர் பங்கேற்கின்றனர்.

கொரோனா பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது. இதேபோல் 90 வயதை கடந்த பிரமுகர்கள், அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை என கூறியுள்ள ராம ஜென்ம பூமி அறக்கட்டளை, சதுர்மாக்கள், முனிவர்கள், சங்கராச்சாரியார், துறவிகள் ராமர் கோயில் கட்டுமானத்தில் பங்கேற்கமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்படுவர்.

நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண், 100 நதிகளின் புனித நீரும் பூமி பூஜைக்காக அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. பூமி பூஜைக்கான சடங்குகள் நேற்று முறைப்படி தொடங்கின. இன்றும் தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகின்றனர்.

அயோத்தி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவை அயோத்தி மக்கள் தீபாவளி போலவே கொண்டாடி மகிழ்கிறார்கள். வீடுகளில் விளக்கேற்றியும், மின்விளக்குகளால் அலங்கரித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அங்குள்ள கோவில் களில் அனைத்தும் விஷேச வழிபாடுகளும், சடங்கு முறைகளும் நடந்து வருகின்றன. அங்கு இடைவிடாது ஒலித்து வரும் பஜனைகளால் அயோத்தி முழுவதும் ஆன்மிக மணம் கமழுகிறது.

இதை மேலும் சிறப்பிக்கும் வகையில் ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினரோ, காணும் இடமெல்லாம் ராமாயண காட்சிகளாலும், ராம பிரானின் படங்களாலும், வண்ண கோலங்களாலும் விழாக்கோலம் பூணச்செய்துள்ளனர். அயோத்தி முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

அயோத்தியில் கட்டப்பட்ட உள்ள ராமர் கோவில் முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவில் கட்டுமானம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது: ராமருக்கான கோவிலில், இரும்பு கம்பிகள், மரம், தாமிரம், வெள்ளை சிமெண்ட் ஆகியவை பயன்படுத்தப்படாது. பல நுாற்றாண்டுகள் நிலைத்து இருக்கும் என்பதால், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே அமைக்கப்படும்.

இதற்கு தேவையான கற்கள் ஏற்கனவே அயோத்தியில் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் கற்கள், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட உள்ளன. பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை கோவிலுக்கான அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராமர் கோவில் 360 தூண்களுடன் விசாலமான 5 குவி மாடங்களுடன், 161 அடி உயர கோபுர கலசத்துடன் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான கற்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பன்ஷி மலையில் இருந்து கொண்டு வரப்பட உள்ள நிலையில், மூன்றரை ஆண்டுகளில் கோவிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக சந்திரகாந்த் பாய் சோம்புரா என்பவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் ஸ்ரீராம் என எழுதப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட செங்கல்கள் இந்த கோவிலின் அடித்தளத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது சிறப்பு அம்சமாகும்.

கோவில் படிக்கட்டுகள் 16 அடி அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. ரங்க மற்றும் நிருத்திய மண்டபங்கள் கடந்த காலங்களில், கோவிலில் பணியாற்றும் தேவதாசி பெண்கள் நடனமாட பயன்பட்ட நிலையில், தற்போது அவை 3 பக்கமும் இருந்து பகவான் ராமரை தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.