விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6000: வரும் 24ந்தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
டில்லி:
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை வரும் (பிப்ரவரி) 24ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதன்படி வருடத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு கடந்த 1ந்தேதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 22 வேளாண் விளைபொருட்களுக்கு அதன் உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும், விவசாயிகளே கால்நடை வளர்த்தால், அவர்களுக்கு 2% வட்டி தள்ளுபடி என்றும் தெரிவித்தார். 2020ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2 ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில், 3 தவணையாக செலுத்தப்படும் என்றும் பட்ஜெட்டை தாக்கல் செய்த இடைக்கால நிதி அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்திருந்தார்.
அதன்படி இந்த திட்டம் வரும் 24ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றைய தினம் பிரதமர் மோடி திட்டத்தை தொடங்கி வைத்து முதல் கட்டமாக விவசாயிகளுக்கு ரூ.2 ஆயிரம் நிதி வழங்குவார் என்றும் கூறப்பட்டு உள்ளது