சென்னை,

தினந்தந்தி நாளிதழில் பவள விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். இதன் காரணமாக சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினந்தந்தி நாளிதழின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா இன்று காலை 10.30 மணி அளவில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, டில்லியிலிருந்து விமானப்படை விமானம் மூலம் பிரதமர் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் லும், நேப்பியர் பாலம் அருகே உள்ள கடற்படை தளத்திற்கு வருகிறார்.  அங்கிருந்து விழா நடைபெறும் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா மண்டபத்திற்கு காரில் செல்கிறார்.

இந்த விழாவில் பிரதமர் மோடியுடன்,  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும், தமிழக முதலமைச்சர் பழனிசாமி உள்பட அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதையடுத்து பிரதமர் மோடி, சென்னை   எம்.ஆர்.சி நகரில் நடைபெறும், பிரதமர் அலுவலக இணை செயலர் டி.வி.சோமநாதன் இல்ல திருமண விழாவிலும் பங்கேற்கிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையம், கடற்படை தளம், சென்னை பல்கலை வளாகம், மெரினா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.