சிறப்பான நிர்வாகம்: நாடு முழுவதும் 702 மாவட்டங்கள் பிரதமர் விருதுக்கு தேர்வு…

டெல்லி: பொது நிர்வாகத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, நாடு முழுவதும் 702 மாவட்டங்கள்  பிரதமர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவித்து உள்ளது.
நாட்டில் உள்ள மாவட்டங்களில், பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு, ஆண்டு தோறும், மத்திய அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, கொரோனா பாதிப்புக்கு இடையிலும்,  பொருளாதார வளர்ச்சியை உருவாக்கிய மாவட்ட ஆட்சியர் களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேர்வை,  மத்திய பணியாளர் அமைச்சகம்  ஆய்வு செய்து வந்தது.
இதில், நாடு முழுவதும் இருந்து 702 மாவட்டங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய பணியாளர் அமைச்சகம்  தெரிவித்து உள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா,  அக்டோபர் 31ந்தேதி,  குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலையின் அருகே பிரதமர் முன்னிலையில் நடைபெற உள்ளதாகவும்,  தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுக்கு பிரதமர் மோடி விருது வழங்கி கவுரவிப்பதார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில், மக்கள் வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை செயல்படுத்துதல், பொதுமக்களின் குறைகளை விரைந்து சீரமைத்தல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்ட நடவடிக்கை களை கருத்தில் கொண்டு, விருதுக்கான மாவட்டங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான விருதுகளுக்கு 702 மாவட்டங்கள் பதிவாகி உள்ளன.
அத்துடன், 646 விண்ணப்பங்கள், புதுமையான திட்டங்கள் பிரிவின் கீழ் வந்துள்ளன.இதில், 104 விண் ணப்பங்கள், மத்திய அரசு அமைப்புகளைச் சேர்ந்தவை.  இந்த பிரிவில், மாநில அளவிலான புதுமை திட்டங்களின் கீழ், 193 விண்ணப்பங்களும், மாவட்ட அளவில், 660 விண்ணப்பங்களும் வந்து உள்ளன. கங்கை நதியை துாய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் விருது பெற, 81 மாவட்டங்கள், தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.