பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் ‘படு தோல்வி:’ ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்கள்

டில்லி:

த்திய அரசின் பயிர் காப்பீடு திட்டமான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனாவில் இருந்து 84 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் விலகிக்கொண்டதாக தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலம் தெரியவந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டு, பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பானிபட்டை ஆர்டிஐ ஆர்வலர் பி.பி. கபூர்,  தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் வேளாண்மை துறையில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு  பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்தில் இணைந்த விவசாயிகளில், சுமார் 84 லட்சம் விவசாயிகள் விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இவர்களில் பெரும்பாலோர் பாஜக ஆளும் மாநிலங்களான  மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் , ராஜஸ்தான், மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இந்த 4 மாநில 68.31 லட்சம் விவசாயிகள் மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், 2017-18 ஆண்டிற்கான குறுவை பயிர் காப்பீட்டு கோரிக்கைகள் இன்னும் மதிப்பீடு செய்யப்படாத நிலையில், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி மற்றும், ஐஎப்எப்சிஓ (IFFCO) உள்ளிட்ட பயிர் காப்பீட்டு நிறுவனங்கள், இந்த திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் சுமார் 15,795 கோடி ரூபாய் வரை லாபம் அடைந்திருப்பதாகவும் தெரிய வந்ததுள்து. இந்த நிறுவனங்களின்  2016-17 ஆண்டிற்கான லாபம் தோராயமாக 6,459 கோடி ரூபாய்  என்று ஆர்டிஐ. தகவலில் தெரிய வந்துள்ளது.

ஆர்டிஐயின் தகவல்களை ஆராயந்த பி.பி. கபூர், மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டத்தினால், தனியார் நிறுவனங்களே லாபம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் படுதோல்வி என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், இத்திட்டத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்காமல்  அரசே நேரடியாக விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தி இருக்கலாம் எனவும் ஆலோசனை கூறி உள்ளார்.

ஆர்.டி.ஐ. புள்ளிவிவரங்களின் படி, 2016-17ல் 5,72,17,159 விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்  இணைத்துள்ளனர். இதில் 4,35,52,715 கடன் பெற்ற விவசாயிகள் மற்றும் 1,36,64,444 கடன் பெறாத விவசாயிகள் என தெரிய வந்துள்ளது.

தற்போது, இந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2017-18 ஆண்டில் 4,87,70,515 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களின்  கடன் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கை 3,51,36,128 ஆகக் குறைந்துவிட்டது. ஆனால் , கடன் பெறாத 1,36,34,387 விவசாயிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை .

அதிகபட்சமாக 31,25,025 ராஜஸ்தான் விவசாயிகள் இத்திட்டத்தில் இருந்து விலகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது. இதை தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் 19,46,992 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 14,69,052 பேரும், மத்திய பிரதேசத்தில் 2,90,312 பேரும் விலகி உள்ளனர்.

தென்னிந்தியாவில், கர்நாடகாவில் காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 27,37,667 லிருந்து 16,08,569 ஆக குறைந்துள்ளது. ஆந்திராவுக்கு 17,74,444 முதல் 18,18,449 வரை அவர்களது எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த திட்டத்தின் முதல் ஆண்டில், காப்பீட்டு நிறுவனங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் சம்பாதித்த போதிலும், அதே ஆண்டில் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் இழப்புகள் ஏற்பட்டன.

தமிழ்நாட்டில், காப்பீட்டு நிறுவனங்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை சுமார் 3,35,562 லட்ச ரூபாய் ஆகும். இதன் மொத்த பிரீமியம் சுமார் 1,22,737 லட்சமே ஆகும். இதேபோல், ஆந்திராவில் 3,012 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டது.