உயர் ரக உணவிற்காக அரசு பணத்தை செலவு செய்த பிரதமரின் மனைவி

ஜெருசேலம்: இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா நெதன்யாகு மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நெதன்யாகு தற்போது பாரிஸ் சென்றுள்ளனர். இந்நிலையில் வியாழக்கிழமை சாரா நெதன்யாகு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் அரசாங்கத்தின் 100,000 டாலர் மதிப்புடைய தொகையை தனது தனிப்பட்ட செலவிற்காக சாரா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
isreal pm
பிரதமரின் குடியிருப்பில் அரசால் நியமிக்கப்பட்ட முழுநேர சமையல்காரர்கள் இருந்து வந்த நிலையில், சாரா தனக்கு பிடித்த உயர் ரக உணவை சமைத்து தரும் சமையல்காரரை தனிப்பட்ட முறையில் நியமித்து அரசாங்கத்தின் பணத்தை செல்வழித்துள்ளார். இது முதல் தடவை நடக்கவில்லை என இஸ்ரேலின் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

59வயதான சாரா நெதன்யாகு உயர் ரக உணவுகளுக்காக மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை மறைக்க சாரா முயன்று வருவதாக கூறப்படுகிறது. குடும்ப நிதி அறிக்கையை தவறாக குறிப்பிட்டது, சமையல்காரர்கள், இதர வேலைக்காரர்கள் மற்றும் வெளி பணியாளர்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தொகையில் சாரா ஊழல் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து நெதன்யாகுவின் வழக்கறிஞர் கூறுகையில், “ இழப்பீடுகள் வழங்குவதன் மூலம் இந்த வழக்கை தவிர்க்க பிரதமர் விரும்பினார். ஆனால் அவ்வாறு செய்ய சாரா நெதன்யாகு மறுத்துவிட்டார்” என கூறினார்.