சிறை மரணம்: 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க வைகை கமிட்டி சிபாரிசு

சென்னை:

ல்வேறு வழக்குகள் காரணமாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள வயதான கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாம்  என்று சென்னை உயர்நீதி மன்றம் அமைத்த மூத்த வழக்கறிஞர் வைகை  தாக்கல் செய்த அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள பல கைதிகள் வயோதிகம் மற்றும் நோய் காரண மாக மரணத்தை தழுவி வருகின்றனர். வேறு சிலர் சிறை அதிகாரிகளின் தாக்குதலாலும், ஒருசிலர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை போன்ற முடிவுளாலும் மரணத்தை தழுவி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2000ம்  ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 1095 கைதிகள் மர்மமான முறையிலும், உடல் நலன் பாதிக்கப்பட்டும் இறந்துள்ளதாக வழக்கறிஞர் கேசவன் என்பவர் தொடர்ந்த வழக்கு காரணமாக, இறந்த கைதிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர்நீதி மன்றம் கடந்த 2017ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து,  சிறைகளில் கைதிகள் மரணமடைவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மூத்த வழக்கறிஞர் வைகை என்பவரை சென்னை உயர்நீதி மன்றம் நியமித்தது.

இந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் வைகை, சிறை கைதிகள் மரணம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில், தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்  என்று சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.