மும்பை

வி மும்பை பகுதியில் உள்ள தலோஜா சிறையில் கைதிகள் தங்கள் உறவினர்களை தடுப்பு இல்லாமல் சந்தித்துள்ளனர்.

வழக்கமாக சிறையில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களை சந்திக்கும் போது ஒரு சுவர் அல்லது கம்பிகள் உள்ள ஜன்னல் வழியாக சந்திப்பார்கள்.  சில வேளைகளில் கண்ணாடி அறையில் ஒரு பக்கம் கைதிகளும் மற்றொரு பக்கம் உறவினர்களும் இருப்பது வழக்கம்.  சிறையில் வாடும் கைதிகள் இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.  இதை தவிர்க்க இந்தச் சிறையில் ஒரு புதிய வழிமுறை செய்யப்பட்டது.

இது குறித்து தலோஜா சிறை அதிகாரி சதானந்த் கெயிக்வாட் கூறுகையில், “சிறையில் அடைபட்டுள்ள கைதிகள் தங்களின் குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் பிரிந்து இருப்பதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  சிலர் தற்கொலை எண்ணத்திலும் பாதிக்கப் படுகின்றனர்.  அதைப் போக்க இந்தச் சிறையில் ஒரு புதிய நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தோம்.  கலா பெட் என மராட்டியில் பெயர் சூட்டப்பட்ட இந்த நிகழ்வு மூலம் கைதிகள் தங்கள் உறவினர்களுடன் அருகில் அமர்ந்து பேசவும் தங்கள் குழந்தைகளை ஆசையுடன் கட்டித் தழுவவும் முடியும்.

இந்த நிகழ்வுக்கு எங்களுக்கு சமூக சேவகர்களான அமர் சாவந்த் மற்றும் சந்தீப் திகே ஆகியோர் உதவி செய்தனர்.  சிறையில் நிகழ்ச்சிகள் நடத்த ஒரு ஹால் உண்டு.  அதில் கைதிகளும் உறவினர்களும் சந்தித்தனர்.   கைதிகளில் சிலர் சிறையில் உள்ள கேண்டீனில் இருந்து தங்களின் குழந்தைகளுக்கு கேக், பிஸ்கட் போன்றவற்றை வாங்கி அளித்தனர்.  சிறைத் தரப்பில் இருந்தும் தின்பண்டங்கள் அளிக்கப்பட்டன.  அவற்றை குழந்தைகளுக்கு ஊட்டி கைதிகள் மகிழ்ந்தனர்.

மிகச் சிறிய குழந்தைகள் உறவினர்களுடனும் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அவர்களின் பெற்றோருடனும் அனுமதிக்கப்பட்டனர்.  இதன் மூலம் கைதிகள் மிகவும் மகிழ்ந்ததாக தெரிவித்துள்ளனர்.  நேற்று நடந்த   இந்த சந்திப்பில் 13 குடும்பங்கள் கலந்துக் கொண்டன.  அந்தக் குடும்பத்தினர், குறிப்பாக குழந்தைகள் தங்களின் தந்தையுடன் அரை மணி நேரம் சேர்ந்து இருந்ததற்காக பெரிதும் மகிழுந்துள்ளனர்.” என தெரிவித்தார்.