Random image

கைதிகள் சொகுசு வாழ்க்கை: திருச்சி மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

திருச்சி:

சென்னை மத்திய சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்த நிலையில், இன்று திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி  மாநகர போலீஸ் உதவி கமி‌ஷனர், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 50 பேர் கொண்ட குழு இன்று அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை புழல் சிறையில் கைதிகள் சிறை அறையில் டி.வி. மெத்தை, செல்போன் வசதியுடன் சிறப்பு உணவு தயாரித்து சாப்பிட்டு சொகுசு வாழ்க்கை நடத்தியது சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறை வார்டன்கள் மாற்றப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக  இன்று அதிகாலை 6.30 மணிக்கு திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு திருச்சி மாநகர போலீஸ் உதவி கமி‌ஷனர் சிகாமணி, சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு நிகிலா ராஜேந்திரன் தலைமையில் ஆயுதப்படை போலீசார் மற்றும் சிறை வார்டன்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழு அதிரடியாக திருச்சி சிறையில் சோதனை நடத்தினர்.

திருச்சி மத்திய ஆண்கள் சிறையில் 1,300 கைதிகள் உள்ளனர். இதில் சுமார் 800 பேர் ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர். இங்கு சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின்போது, எந்தவிதமான பொருளோ, மொபைல் போன்களோ  சிக்கவோ, கைப்பற்றப்படவோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள திருச்சி மத்திய பெண்கள் சிறையிலும் இன்று காலை வெளியிலிருந்து போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது பெண் கைதிகளிடமும் பெண் போலீசார் சோதனை செய்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.