மும்பை: கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தடைசெய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியது தொடர்பாக வேறுபல தகவல்கள் வெளிவந்து அந்த விஷயத்தை வேறு கோணத்தில் கொண்டு செல்கின்றன.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியின்போது தனக்கு இருமல் தொல்லை இருந்ததாகவும், அதனால் சாதாரணமாக ஒரு ஃபார்மசிக்கு சென்று மருந்து வாங்கி பயன்படுத்தியதாகவும் அவர் கூறியிருந்தார். அந்த மருந்தில்தான் பிரச்சினை என்பது கண்டறியப்பட்டு, அவருக்கான தண்டனை குறைக்கப்பட்டது.

ஆனால், பிரித்வி ஷா இடம்பெற்ற மும்பை அணியின் பயிற்சியாளர் வினாயக் சமந்த் மற்றும் பிசியோதெரபிஸ்ட் தீப் தோமார் ஆகியோர், அந்த சமயத்தில் பிரித்வி ஷா, சளி மற்றும் இருமல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதாக நாங்கள் கண்டறியவில்லை என்று தெரிவித்துள்ளனர். அவருக்கு லேசான காய்ச்சல் இருந்ததாகவும், அதேசமயம் சளியோ, இருமலோ இருக்கவில்லை என்பதும் அவர்களின் வாக்குமூலம்.

அதேசமயம், பிரித்விஷா, இதுதொடர்பாக தங்களிடம் எந்த உதவியையும் கேட்டு அணுகவில்லை என்பதும் அவர்களின் வாதம். அதேசமயம் அணி மேலாளர் கணேஷ் ஐயர் கூறுகையில், “அவருக்கு சற்று சளி இருந்ததை நான் கண்டேன். ஆனால், அவர் என்னிடம் வந்த அதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை” என்றார்.

ஒரு பயிற்சிபெற்ற கிரிக்கெட் வீரர், தனக்கிருக்கும் ஒரு சிறிய உடல்நலப் பிரச்சினைக்காக, அணி தங்கியிருக்கும் ஹோட்டலை விட்டு வெளியேறி, சாதாரணமாக ஒரு மருந்துக் கடையில், மருத்துவரின் பரிந்துரையில்லாமல் எப்படி மருந்து வாங்கி பயன்படுத்துவார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே ஹோட்டலில் மருத்துவரும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, பிசிசிஐ அமைப்பு இந்த வழக்கை தவறாக கையாண்டுள்ளது என்று தொடர்புடையவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.