புதுடெல்லி:

கடந்த 2019-2020 ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் 25 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பிரித்வி ஷாவ் மற்றும் மாயங் அகர்வால் ஆகியோர் இடம் பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


பிசிசிஐ ஒப்பந்தத்தின்படி, ரூ.7 கோடி சம்பளம் வாங்கும் ஏ பிளஸ் பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா இடம் பெற்றுள்ளனர்.

ரூ.5 கோடி சம்பளம் பெறும் ஏ பிரிவில் தோனி, புஜாரா, அஸ்வின், ஜடேஜா, இஷாந்த் சர்மா, ஷமி, குல்தீப் யாதவ், ஷிகர் தவண், புவனேஷ்வர் குமார், ரஹானே ஆகியோருடன் ரிஷப் பந்தும் இடம் பிடித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் ரூ.3 கோடி சம்பளம் பெறும் பி பிரிவிலும், கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு, மணீஷ் பாண்டே, ஹனுமா விகாரி, கலீல் அகமது, சாஹா ஆகியோர் ரூ.1 கோடி சம்பளம் பெறும் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த வருட பட்டியலில் இருந்த ரெய்னா, முரளி விஜய், பார்த்தீவ் படேல், ஜெயந்த் யாதவ், அக்‌சர் படேல், கருண் நாயர் ஆகியோருக்கு இம்முறை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.

மேலும், சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன்களான பிரித்வி ஷாவ் மற்று மாயாங் அகர்வால் ஆகியோர் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இந்தியாவுக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஷா, 150 ரன்களை குவித்துள்ளார். மாற்று வீரராக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடி 2 முறை ஐம்பது ரன்களை குவித்துள்ளார் அகர்வால் .
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஃபீல்டிங் செய்தபோது, கையில் காயம் ஏற்பட்டதால், அவருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.