ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் தயாராகும் தனியார் நிறுவனங்கள்

மும்பை

பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசியை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி போட தயாராகி வருகின்றன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதையொட்டி பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராகி வருகின்றனர்.   இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து முதல் கட்டமாக கொரோனா முன் களப் பணியாளர்கள், மற்றும் சுகாதார ஊழியர்களுக்குப் போடப்பட்டது.

அதன் பிறகு மார்ச் 1 முதல் 60 வயதை தாண்டியவர்களுக்கும் 45 வயதாகி இணை நோய் உள்ளோருக்கும் இரண்டாம் கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.    அதன் விரிவாக்கமாக ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் இளம் வயதுடையோர் பெரும்பாலான அளவில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.   இதனால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்னும் கோரிக்கை நாடெங்கும் எழுந்தது.  குறிப்பாகப் பல மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் வயது வரம்பை 18 வயதுக்கு மேற்பட்டோர் என மாற்ற வேண்டுகோள் விடுத்தன.

இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனங்களான கோத்ரெஜ் குழுமம், டாடா குழுமம், மகேந்திரா, மாரிகோ, மாருதி சுசுகி, டிவிஎஸ் மோட்டார் மற்றும் வேதாந்தா குழுமத்தினர் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.   அவர்கள் தங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்து ஊழியர்களுக்கு அளிக்க முன்வந்தனர்.

தற்போது மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.   மேலும் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியில் 50% மருந்தை மத்திய அரசுக்கும் மீதமுள்ள 50% மருந்தை மாநில அரசுகள் மற்றும் தனியாருக்கு விற்பனை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

இதையொட்டி கொரோனா தடுப்பூசி நிறுவனங்களும் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியாருக்கு விற்க உள்ள விலை குறித்தும் அறிவித்துள்ளன.  தற்போது பல பிரபல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளைப் போடத் தயாராகி வருகின்றன.  இவற்றில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் கட்டணம் பெற உள்ளதாகவும் மற்ற நிறுவனங்கள் இலவசமாகவும் தடுப்பூசிகள் வழங்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.