சென்னை:  சென்னையில் அரசு அனுமதி பெற்ற கொரோனா ஆய்வு மையங்கள், கொரோனா சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்து உள்ளார்.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில், இன்று சென்னையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற தனியார் பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கொரோனா அனுமதிபெற்ற  44 பரிசோதனை மையங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்,  தனியார், கொரோனா பரிசோதனை மையங்களில் கொரோன சோதனை செய்து கொள்ள வருகைதரும் நோயாளிகளின் முழு விவரங்கள் மற்றும் தகவல்களைக் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்,

சோதனை செய்ய வருபவர்களின் சுய விவரங்களைச் சேகரிக்கப்பட வேண்டும்,  அவர்களின்  பெயர், அவரின் முழு முகவரி (Address proof), வயது, பாலினம், அவர்களின் தொழில் விவரம் மற்றும் குடும்பத்தினர் விவரங்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும்,

கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையினை துல்லியமான முறையில் மேற்கொண்டு, முடிவினை 24 மணி நேரத்தில் சோதனை முடிவு தெரிவிக்க வேண்டும்,

பரிசோதனை மையங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும் தொழில்நுட்பத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்,

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனைக் கூடங்கள் பின்பற்ற வேண்டும்,

சோதனை மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகளை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.