ரயில்களை இயங்கவில்லை என்றால்  இழப்பீடு செலுத்த வேண்டும் – தனியார் ஆபரேட்டர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை

--

புதுடெல்லி:

யில்வே நெட்வொர்க்கில் இயங்கும் ரயில்கள் தாமதமாகவோ அல்லது முன்கூட்டியோ வந்துவிட்டால் தனியார் ஆபரேட்டர்கள் ரயில்வேக்கு பெரும் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும். மேலும் நிதி அபராதங்களை தவிர்ப்பதற்காக அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நேரக்கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ஆகஸ்ட் 12-ஆம் தேதி ரயில்வே தனியார் நிறுவனங்களுடன் தன்னுடைய இரண்டாவது கூட்டத்தை நடத்தியது மற்றும் இந்தியாவில் தனியார் ரயில்கள் ஓடுவதற்கான வரைவு விபரக்குறிப்பை அந்தக் கூட்டத்தில் பகிர்ந்து கொண்டது. தனியார் நிறுவனங்களுடன் முதல் கூட்டம் ஜூலை 21-ஆம் தேதி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி குறைந்த பட்சம் பத்து நிமிடங்களுக்கு முன்னதாக வந்தடையும் ஒவ்வொரு ரயிலுக்கும், தனியார் நிறுவனம் கூடுதல் கட்டணத்தை ஊக்கத்தொகையாக செலுத்தும். ஒரு தனியார் ரயிலுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 512.31 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு வருடத்தில் ஒரு ரயில் அதன் நேரத்தை சரியாக கடைபிடிக்காமல் நேரகட்டுப்பாட்டை ஒரு சதவீதம் வரை குறைத்துக்கொண்டால் அதற்கும் சேர்த்து தனியார் நிறுவனத்திடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரயில்வே கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட கால்நடைகள், அல்லது மனிதர்கள் ஓடுவது, கிளர்ச்சிகள், மோசமான வானிலை போன்ற காரணங்களால் ரயில் தாமதமாகி விட்டால் அதற்காக தனியார் நிறுவனங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே சேவைகள் ரத்து செய்யப்பட்ட சூழ்நிலைகளில் அந்த பயணத்திற்காக செலுத்த வேண்டிய மொத்த தொகையில் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தை தனியார் நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ரயில்வே அலுவலகத்தில் அவர்களுடைய வருவாயை உண்மையாகவும், நேர்மையாகவும் தெரிவிக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் தெரிவிக்கப்பட்டது உண்மையல்ல என்று கண்டறியப்பட்டால், அதன் பத்து மடங்கு கட்டணத்தை நிறுவனங்கள் ரயில்வேக்கு செலுத்த வேண்டியிருக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ரயில்வே நெட்வொர்க்கில் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான தனியார் முதலீட்டில் முதல் முயற்சி இதுவாகும், இந்த திட்டத்திற்கு சுமார் 30,000 கோடி ரூபாய் தனியார் துறை சார்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஏலத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.