தனியார் அமைப்பான கிரிக்கெட் வாரியம் நாட்டின் பிரதிநிதி போல் செயல்படக்கூடாது: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

னியார் அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ ) இந்திய நாட்டின் பிரதிநிதிபோல் செயல்படுவதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

டில்லியைச் சேர்ந்த கீதா ராணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்து மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், “இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது தனியார் அமைப்பு.  ஆனால் தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  இந்த அமைப்பு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதாவது இந்திய அரசின் ஒரு அங்கம் போல் வெளிக்காட்டிக்கொள்கிறது.

இதற்காக பி.சி.சி.ஐ. மத்திய அரசிடம் இருந்து எந்தவிதமான முறையான அனுமதியோ அங்கீகாரமோ பெறவில்லை.  ஆகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு  வாரியத்தை (பிசிசிஐ) தடை செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பி.சி.சி.ஐ. அதிகாரிகளுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த  வழக்கில் மத்திய அரசு மற்றும் பிசிசிஐ பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.