புதுடெல்லி: இந்தியாவில் இயக்கப்படவுள்ள தனியார் ரயில்களுக்கான கட்டணங்களை அரசு ஒழுங்குப்படுத்தாது என்றும், அதை தனியார்களே முடிவுசெய்துகொள்ளலாம் என்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

வரும் 2023ம் ஆண்டு முதல் இந்தியாவில் தனியார் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மொத்தம் 100க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள தனியார் ரயில்களில், கட்டண நிர்ணயம் என்பது சந்தை நிலவரத்திற்கேற்ப முடிவுசெய்யப்படலாம் என்றும், அதற்காக அரசின் ஒழுங்குமுறை அமைப்பிடம் அனுமதி கோர தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பம்பார்டியர் டிரான்ஸ்போர்டேஷன் இந்தியா, சியமன்ஸ் லிமிடெட், அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிட்., உள்ளிட்ட மொத்தம் 23 தனியார் நிறுவனங்கள், ரயில்களை இயக்குவதற்கு முன்வந்துள்ளன.

ஏனெனில், பயணிகளின் எதிர்பார்ப்பு, தேவையான சேவைகளை தேர்வுசெய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு, பயணிகளை கவர வேண்டுமெனில், கட்டணங்களை தேவைக்கேற்ப நிர்ணயித்துக்கொள்ளும் சுதந்திரம் வழங்கப்படுவது அவசியம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.