தெலுங்கானாவில் நாளை தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஸ்டிரைக்: 2லட்சத்து 50ஆயிரம் பேர் பங்கேற்பு

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் நாளை  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக சுமார் 12 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஊதிய விவகாரம், வரி பிடித்தம், பிஎப், ஈஎஸ்ஐ வசதி போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 12ஆயிரம் தனியார் பள்ளி களை சேர்ந்த 2லட்சத்து 50ஆயிரம் ஆசிரியர் பெருமக்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ள னர். இந்த போராட்டத்துக்கு  தெலுங்கானா தனியார் ஆசிரியர்கள் கூட்டமைப்பு  (TPTF) அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள தனியார் ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர்  ஷபீர் அலி, மாநிலத்தில் 2,50,000 ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்றார்.

கோரிக்கைகள் விவரம்:

அரசின், அரசாணை1-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆசிரியர்களின் 12 மாத ஊதியம், வங்கியின் சேமிப்பு கணக்கில் பள்ளி நிர்வாகம் செலுத்த வேண்டும்.

மாநில அரசு, தனியார் ஆசிரியர்கள் நலன் கருதி, தனியார் ஆசிரியர் நல வாரியம் அமைக்க வேண்டும்

பள்ளிகளுக்கான சொத்து வரி அகற்றப்பட வேண்டும்

பள்ளிகளுக்கான எலக்ட்ரிக் பில், வணிக விகிதத்தில் இருந்து வீடுகளுக்கான விகிதத்தில் மாற்ற வேண்டும்

மெடிக்கல் இன்சூரன்சு கார்டு வழங்கப்பட வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

50 வயதுக்கு மேலான ஆசிரியர்களுக்கு தலா ரூ.5000 பென்சன் வழங்கப்பட வேண்டும்

ஆசிரியர்களுக்கு மேல்சபை தேர்தலில் போட்டியிடும்  உரிமை தரப்பட வேண்டும்

கல்வி உரிமை சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்காக 25 சதவிகித இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களுக்கும் ஈஎஸ்ஐ, பிஎப் வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.

பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்த வேண்டும்.

அனைத்து சிறிய பள்ளிகளுக்கும் அரசு நிதி உதவியுடன் வங்கி கடன் வழங்கப்பட வேண்டும்.

மேலே உள்ள கோரிக்கைளை வலியுறுத்தி நாளை தெலுங்கானா மாநிலம் முழுவதும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

இதன் காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.