சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம்! பொதுமக்கள் தவிப்பு

சென்னை:

சென்னையில் தண்ணீர் வழங்கி வரும் தனியார் தண்ணீர் லாரிகள் இன்றுமுதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

சமீபகாலமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், ஏரிகளில் நீர்மட்டம் உயராத நிலையில், லாரி தண்ணீரையே நம்பி உள்ள சென்னை மக்களுக்கு குடிநீர் லாரிகள் ஸ்டிரைக் அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு தேவையான குடிநீர், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து எடுத்து வரப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக நிலத்தடி நீரை கனிம வளப் பிரிவில் சேர்க்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளில், நிலத்தடி நீரை அனுமதியின்றி எடுப்பதாகக் கூறி, லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது தொடர்கதையாகி உள்ளது. சமீபத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதாகக் கூறி தனியார் தண்ணீர் லாரிகள் சிறைபிடிக்கப்பட்டன.

இதன் காரணமாக  பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதால், நிலத்தடி நீரை கனிம வளப்பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் போராட்டம் அறிவித்து உள்ளனர்.

ஏற்கனவே கடந்த மே மாதம் 27  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்த நிலையில், அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இன்றுமுதல் மீண்டும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு உள்ளனர்.