சாத்தான்குளம் சம்பவத்திற்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா கண்டனம்: ஒன்றிணைந்து குரல் எழுப்ப கோரிக்கை

டெல்லி: சாத்தான்குளம் சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும் என்று நடிகை ப்ரியங்கா சோப்ரா வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசார் விசாரணையின் போது உயிரிழந்த சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு நடிகை ப்ரியங்கா சோப்ரா கடும் கண்டனம் தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

நான் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்கள் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகின்றன. எந்தவொரு மனிதருக்கும் இந்தக் கொடுமை நிகழக்கூடாது, அவர் என்ன குற்றம் செய்திருந்தாலும் சரி.

அதற்குக் காரணமான குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும். அந்தக் குடும்பத்தினர் இப்போது எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. அவர்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள். இறந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருக்கும் நீதி கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.