டில்லி:

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில்,  மோடியை எதிர்த்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர்  பிரியங்கா காந்தியை களமிறங்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உ.பி கிழக்கு பகுதி பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட  பிரியங்கா காந்தி உ.பி.யில் தனது தாயார் மற்றும் சகோதரருக்காக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அத்துடன் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.  பிரியங்காவின் பிரசாரத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கடந்த வாரம் பிரதமர் மோடியின்  வாரணாசியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்ட பிரியங்காவுக்கு பலத்த வரவேற்பு கிடைத்து.  அந்த பகுதியில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனத்தில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். வாரணாசியில் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு  சென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி உங்களுக்கு என்ன செய்தார் என்று  கேள்வி எழுப்பினார். பிரியங்காவுக்கு வாரணாசியில் கிடைத்த எழுச்சிமிகு வரவேற்பு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சியினரை சிந்திக்க வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா காந்தியை நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.  இதற்காக எதிர்க்கட்சிகளுடன் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருவதாகவும், எதிர்க்கட்சிகள் சம்மதித்தால், பிரியங்காவை மோடிக்கு எதிரான பொது வேட்பாளராக களமிறக்க காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும் டில்லி காங்கிரஸ் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே உ.பி. மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பிரியங்காவை தேர்தலில் போட்டியிட வற்புறுத்தி வரும் நிலையில், பிரியங்காவும், மோடிக்கு எதிராக போட்டியிடவா என்று அவர்களிடம் பதில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தநிலையில், பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில்  பிரியங்காவை இறக்கி விடலாமா? என்ற யோசனையில் காங்கிரஸ் மேலிடம் உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே உ.பி. ராகுல், சோனியா போட்டியிடும் தொகுதிகளில் தங்களது கட்சி வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்கள் என சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணி அறிவித்திருக்கும் நிலையில், வாரணாசி தொகுதியிலும் அவர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இதன் காரணமாக மோடிக்கு சவால்விடும் வகையில் பிரியங்காவை களமிறக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு இருப்பகதாகவும், இதற்கு பிரியங்காவும் சம்மதித்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாரணாசி தொகுதியில் 7வது கட்ட தேர்தல் நடைபெறும் தேதியான மே 19ந்தேதி தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.