நீதிபதி முரளீதர் நள்ளிரவு இடமாற்றம் அவமானகரமானது : பிரியங்கா காந்தி

டில்லி

நேற்று இரவோடு இரவாக நடந்த நீதிபதி முரளீதர் இடமாற்றம் சோகமானது மற்றும் அவமானகரமானது என பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.   டில்லியில் 75 நாட்களுக்கும் மேலாக ஷாகின் பாக் பகுதியில் நடந்த போராட்டம் நகரின் பல பகுதிகளிலும் பரவியது.   டில்லி நகரின் வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டத்தில் சட்ட ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் மோதல் நடந்து நகரெங்கும் வன்முறை வெடித்தது.    இதில் சுமார் 34 பேர் பலியானதாக தகவல்கள் வெலியாகி உள்ளன.

வன்முறையை தீண்டும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்கள் அனுராக் தாக்குர், பர்வேஷ் வர்மா மற்றும் கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரக் கோரி டிலி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கை விசாரித்த அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி முரளீதர் டில்லி காவல்துறையினரைக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

அத்துடன் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என காவல்துறையினருக்குக் கேள்வி எழுப்பினார்.   திடீரென நேற்று நள்ளிரவு நீதிபதி முரளீதர பஞ்சாப் அரியான உயர்நீதிமன்றத்துக்கு  இரவோடு இரவாக இடமாற்றம் செய்யப்பட்டார்.  இது நீதித்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா தனது டிவிட்டரில், “நள்ளிரவில் நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டது தற்போதைய நிலையில் அதிர்ச்சியை அளித்துள்ளது.  இந்த நடவடிக்கை சோகமானது மற்றும் அவமானகரமானது.   லட்சக்கணக்கான இந்தியர்கள் நீதித்துறையின் மேம்பாட்டில் நம்பிக்கைக் கொண்டுள்ள போது நீதித்துறையின் மீது அரசின் இந்த நடவடிக்கை அந்த நம்பிக்கையை குலைக்கிறது” எனப் பதிந்துள்ளார்.

பிரியங்காவின் சகோதரரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “இடமாற்றம் செய்யப்படாத துணிச்சலான நீதிபதி லோயாவை நினைவு கோருகிறேன்” எனப் பதிந்துள்ளார். நீதிபதி லோயா அமித்ஷா இடம் பெற்றிருந்த சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த போது திடீரென மரணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி