புதுடெல்லி:
த்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்தநிலையில், கடந்த 11ஆம் தேதி பீகாரின் பக்ஸர் பகுதியில், கங்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக, நேற்று (12.05.2021) உத்தரப்பிரதேச மாநிலத்தின் காசிப்பூர் பகுதியிலும், மத்தியப் பிரதேசத்திலும் கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்தன. பீகாரில் கங்கையாற்றில் 71 பிணங்கள் மிதந்ததாகவும், உத்தப்பிரதேசத்தில் கங்கையாற்றில் 52 உடல்கள் மிதந்ததாகவும் கூறப்படுகிறது. சடலங்கள் கங்கையாற்றில் மிதந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கங்கையாற்றில் மிதந்த உடல்கள், உத்தரப்பிரதேசத்திலிருந்து ஆற்றில் விடப்பட்டிருப்பதாக பீகார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் உடல்கள் மிதந்ததன் தொடர்ச்சியாக தற்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தின் உன்னோ பகுதியில், கங்கையாற்றின் ஓரத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களா என சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து ஆற்றில் சடலங்கள் மிதப்பதும், ஆற்றின் கரையோரம் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதும் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளுக்கு கொரோனா அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இந்த சம்பவங்கள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். ஆற்றில் சடலங்கள் மிதந்தது குறித்து வெளியான செய்திகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், “பல்லியா மற்றும் காசிப்பூரில் உள்ள கங்கையில் உடல்கள் மிதக்கின்றன. உன்னாவோவில் ஆற்றின் கரையில் பெரிய அளவில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. லக்னோ, கோரக்பூர், ஜான்சி, கான்பூர் போன்ற நகரங்களிலிருந்து வெளியான அதிகாரப்பூர்வ கொரோனா பலி எண்ணிக்கை, குறைத்து வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது” என கூறியுள்ளார்.

மேலும், பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது என்பதோடு, அது குற்றமாகும். மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவதிப்படுகையில், அரசாங்கம் பிம்ப கட்டமைப்பில் மும்மரமாக உள்ளது. இந்த நிகழ்வுகள் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உடனடியாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.