விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறும் விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் அரசு மறுப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அமிலியா கிராமத்தில் மதுக்கடை ஒன்றில் நேற்றிரவு சிலர் மதுபானம் வாங்கி குடித்துள்ளனர்.  அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக, 6 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி  கண்டித்து  உள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

லக்னோ, பிரோசாபாத், ஹாப்பூர், மதுரா மற்றும் பிரயாக்ராஜ் நகரங்களில் விஷ சாராயத்திற்கு பலர் பலியாகி உள்ளனர். ஆக்ரா, பாக்பத் மற்றும் மீரட் நகரங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்து வருகின்றன.  விஷ சாராய கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு ஏன் தவறுகிறது? யார் பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.