கலாய்த்த மக்களையும் கனிவுடன் சந்தித்த பிரியங்கா காந்தி

டில்லி

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தன்னை கிண்டல் செய்த மக்களிடம் தானே சென்று பேசியது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தேர்தலை முன்னிட்டு உத்திரப் பிரதேசம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வருகிறார். பல இடங்களிலும் அவரைக் காண மக்கள் திரள் திரளாக வருகின்றனர். தேர்தல் பேரணிகளில் வரும் மக்களில் பலரை பிரியங்கா அருகில் சென்று சந்தித்து வருகிறார்.

தன்னுடன் செல்ஃபி எடுத்துக் கொள்பவர்களையும் பிரியங்கா காந்தி ஊக்குவித்து வருகிறார். மொத்தத்தில் அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் மக்களில் ஒரு சிலர் அவரை கேலி செய்வதற்காகவும் மற்றும் எரிச்சலூட்டவும் பல நிக்ழ்வுகளையும் நிக்ழ்த்தி வருவதும் நடக்கிறது. ஆனால் பிரியங்கா அதையும் சமாளிக்கிறார்.

சமீபத்தில் அவர் காரில் சென்ற போது அங்கிருந்த மக்களில் சிலர் மோடி மோடி என கோஷம் இட்டுள்ளனர். காரில் சென்றுக் கொண்டிருந்த பிரியங்கா இறங்கி வந்து அந்த மக்களுடன் கை குலுக்கி பேசி உள்ளார். அத்துடன், “நீங்கள் உங்கள் இடத்தில் உள்ளீர்கள். நான் எனது இடத்தில் உள்ளேன்” எனக் கூறி புன்னகைத்துள்ளார்.

இதனால் அவரை எரிச்சலூட்ட நினைத்தவர்களால் ஒன்றும் கூற முடியாமல் போய் உள்ளது. இந்த நிகழ்வு வீடியோ படமாக்கபட்டு வலைதளங்களில் பரவி வைரலாகி உள்ளது.