காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் வறுமைக்கு எதிரான மிகப் பெரும் தாக்குதல்: பிரியங்கா காந்தி

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் வறுமைக்கு எதிரான மிகப் பெரும் தாக்குதல் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.


காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று அறிவித்த ராகுல்காந்தி, இதன்மூலம் நாடு முழுவதும் 25 கோடி ஏழைகளை வறுமையின் பிடியிலிருந்து மீட்டு எடுக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு உத்திரப்பிரதேச காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவுக்கான நியாயம் என்ற ஹேஸ்டேக்குடன், காங்கிரஸ் கட்சியின் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம், வறுமைக்கு எதிரான பெரும் தாக்குதல் என்று குறிப்பிட்டார்.

பொருளாதார நிபுணர்களுடன் கலந்தாலோசித்தே இத்தகைய முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளதாக பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ராகுல் அறிவிப்பு வெளியிட்டவுடனேயே இதனை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தியின் அறிவிப்பு சாத்தியமில்லாதது. ஏழை மக்களை ஏமாற்றும் செயல் என தெரிவித்திருந்தார்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறையை ராகுல் காந்தி தெரிவிக்கவில்லை என்றும், கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி செயல்படுத்திய திட்டங்களின் அடிப்படையிலேயே வறுமையை ஒழிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
வறுமையை ஒழிக்கும் நோக்கிலான இத்தகைய திட்டத்தை பிரதமர் மோடியும் பாஜகவும் எதிர்ப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.