உத்திரபிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சி பணிகளை கவனித்து வந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு தற்போது பொறுப்பு அளிக்கப்பட்டது.

gandhi

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரியும், சோனியா காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி அவ்வபோது அரசியல் பணிகளை செய்துவந்தார். அதன்படி தேர்தலில் சமயங்களில் ராகுல்காந்தி போட்டியிடும் ரேப்ரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பணிகளை பிரியங்கா காந்தி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. கட்சியில் எந்த ஒரு பொறுப்பில் இல்லாவிட்டாலும் அவ்வபோது வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டிவந்தார். கட்சியின் பணிகளிலும் ஈடுப்ட்டார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு முதல் முறையாக காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா காந்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் கட்சிப் பணிகளை பிரியங்கா காந்தி கவனிப்பார் என ராகுல்காந்தி அறிவித்தார்.

அதுமட்டுமின்றி உத்திரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியின் மாநில பொது செயலாளராக பிரியங்கா காந்தியும், மேற்கு பகுதியில் மாநில பொது செயலாளராக ஜோதிராதித்யா சிந்தியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் பிரியங்கா காந்தி உத்திரபிரதேசத்தின்( கிழக்கு) பொது செயலாளராக பொறுப்பேற்றார். இதேபோன்று அரியானா மாநிலத்தின் பொது செயலாளராக குலாம்நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரியங்கா காந்திக்கு கட்சியில் பொறுப்பு அளிக்கப்பட்டது தங்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.