ப சிதம்பரத்தை வேட்டையாடும் அரசு : பிரியங்கா காந்தி டிவீட்

டில்லி

முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் குறித்து காங்கிரஸ் செயலர் பிரியங்கா  காந்தி வதேரா டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் ஐ  என் எக்ஸ் வழக்கில் முன் ஜாமின் கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனு நேற்று நிராகரிக்கப்பட்டது. அதையொட்டி நேற்று இருமுறை அவர் டில்லி இல்லத்துக்கு சிபிஐ சென்று அவரை தேடி உள்ளனர். அவர் அங்கு இல்லாததால் வீட்டு வாசலில் அவரை இரண்டு மணி நேரத்துக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நோட்டிஸ் ஒன்றை ஒடி உள்ளனர்.

இன்று காலை முதல் அவரைக் கைது செய்ய சிபிஐ அவர் இல்லத்தில் முகாம்  இட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த முன் ஜாமின் ரத்து குறித்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் சார்பில் மேல் முறையீட்டு மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்த விசாரணை இன்று மதியம் 2 மணிக்கு மேல் நடக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் இந்த கெடுபிடி நடவடிக்கைகளுக்குக் காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி வதேரா தனது டிவிட்டரில், “மெத்தப் படித்தவரும், மரியாதைக்குரிய மாநிலங்களவை உறுப்பினருமான ப சிதம்பரம்  நமது நாட்டுக்குப் பல வருடங்களாகப் பணி புரிந்துள்ளார். அவர் நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்துள்ளார். அவர் எப்போதும் உண்மையைப் பேசத் தயங்காதவர். அத்துடன் அரசின் தோல்விகளை வெளிப்படையாகச் சொல்பவர் ஆவார்.

ஆனால் இந்த கோழைத்தனமான அரசுக்கு இந்த உண்மைகள் அசௌகரியத்தை அளித்ததால் அவரை அரசு வெட்கப்படும்படி வேட்டையாடி வருகிறது நாங்கள்  என்றும் அவருக்குத் துணையாக நிற்போம். அத்துடன் என்ன விளைவுகள் நேர்ந்தாலும் உண்மைக்கு ஆதரவான எங்கள் போராட்டத்தைத் தொடர்வோம்” எனப் பதிந்துள்ளார்.