டெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போன், வாட்ஸ் அப் ஆகியவை ஒட்டுக் கேட்கப்பட்டு இருப்பதாக அக்கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து இருக்கிறது.

சில நாட்களில் இந்திய அரசியலில் ஒட்டுக்கேட்பு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நாடு முழுவதும், உள்ள பல முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் வாட்ஸ் அப் தகவல்கள் திருடப்படுகின்றன.

அவர்கள் அனைவரும் கண்காணிக்கப்படுகிறார்கள், அதற்கு இஸ்ரேஸ் உளவு நிறுவனத்தின் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் மத்திய அரசுக்கு முன்பே தெரியும் என்று முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே. பிள்ளை கூறியிருந்தார்.

இந் நிலையில், பிரியங்கா காந்தியின் செல்போன், வாட்ஸ் அப் ஆகியவை கண்காணிக்கப் பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. இது குறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா கூறியிருப்பதாவது:

பிரியங்கா காந்திக்கு வாட்ஸ் அப்பில் இருந்து தகவல் வந்திருக்கிறது. அதில், உங்களுடைய போன் ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறமோ என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கின்றனரா? அல்லது உளவு பார்க்கப்படுவது தெரிந்தே இருக்கின்றனரா என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.