லக்னோ: மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்த மாதத்தில் 20நாட்களாவது  செலவிடுங்கள் என  மாநில  கட்சி நிர்வாகிகளுக்கு, உ.பி.மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா அட்வைஸ் செய்துள்ளார்.

பிரியங்கா காந்தி வீடியோ கான்பரன்சிங் மூலம் கட்சியின் உ.பி.மாநில பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம்  உரையாற்றினார்.  இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் ஊடக அழைப்பாளர் லாலன்குமார் ,  மாநிலத்தில்  கட்சியை வலுப்படுத்த 20 முதல் 22 நாட்கள் மாவட்டங்களில் செலவிடுமாறு  நிர்வாகிகளுக்கு பிரியங்கா வத்ரா அறிவுறுத்தி உள்ளதாகவும்,  இதற்கான பணிகளை  ஜனவரி 3 ஆம் தேதி முதல்  தொடங்குமாறு கேட்டுக் கொண்டதுடன்,  மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்குமாறும் அனைத்து அலுவலர்களையும் கேட்டுக் கொண்டார்.

மேலும்,  மாநில  விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களை சந்தித்து,  “சங்கதன் ஸ்ரீஜன் அபியான்” திட்டதை வேகப்படுத்துமாறும் அறிவுறுத்தியதாக  லாலன் குமார் தெரிவித்தார்.

இந்த காணொளி காட்சி கூட்டத்தில், உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு தவிர, ஏ.ஐ.சி.சி செயலாளர்கள் தீரஜ் குர்ஜார் மற்றும் ரோஹித் சவுத்ரி மற்றும் 800 க்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்று குமார் மேலும் தெரிவித்தார்.