ஸ்ரீநகர்

காஷ்மீரி புத்தாண்டுக்கு காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி அளித்த டிவிட்டர் வாழ்த்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன் தினம் காஷ்மீரிகள் தங்கள் புத்தாண்டை விமரிசையாக கொண்டாடினார்கள்.   தென் இந்தியாவில் தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் தங்கள் புத்தாண்டான யுகாதியை கொண்டாடிய அதே தினத்தில் காஷ்மீரிகள் புத்தாண்டும் கொண்டாடப்பட்டது.   இந்த புத்தாண்டுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில் “அனைத்து காஷ்மீர் சகோதர சகோதரிகளுக்கு நவுரோஸ் (NAUROZ) வாழ்த்துக்கள்.” என வாழ்த்தி உள்ளார்.   இதற்கு பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவி, ”பிரியங்கா காந்தி புதிய ஸ்பெல்லிங்கை கண்டு பிடித்துள்ளாரா அல்லது அவர் ஏதாவது குழப்பத்தில் புதிய பண்டிகையை கண்டு பிடித்துள்ளாரா?” என குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் காஷ்மீரிகளுக்கு சைத்ர மாதத்தின் முதல் நாள் அன்று நவ்ரே (NAVREH) என அழைக்கப்படும் அவர்கள் புத்தாண்டு துவங்குகிறது  எனவும் மார்ச் 21 ஆம் தேதி அன்று நடந்த பார்சிகள் புத்தாண்டு நவுரோஸ் என அழைக்கபடுகிறது எனவும் விளக்கம் அளித்துள்ளது.

 

அதே நேரத்தில் பல காஷ்மீரி பண்டிட்டுகள் நவுரோஸ் என்பதை டில்லி மற்றும் உத்திரப்பிரதேச மக்கள் நவுரோஸ் என அழைப்பது வழக்கம் என பதிந்துள்ளனர்.  காஷ்மீர் பண்டிட்டும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்சு தனது முகநூலில்  ”இன்று நவுரோஸ் அல்லது நவ்ரே கொண்டாடும் காஷ்மீரி பண்டிட்டுக்களுக்கு வாழ்த்துக்கள் “ என பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல நெட்டிசன்களும் இது குறித்து பதிவு இட்டுள்ளனர்.  பெரும்பாலானோர் காஷ்மீரை விட்டு வெளியேறிய பண்டிட்டுக்களில் உத்திரப்பிரதேசம் மற்றும் டில்லியில் குடியேறியவர்கள் நவுரோஸ் என புத்தாண்டை குறிப்பிடுவதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி உள்ளனர்.