புதுடெல்லி:
ன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 19-ம் தேதி உத்கல் விரைவு ரயிலில் ஹரித்துவாரில் இருந்து ஒடிசாவில் உள்ள புரிக்கு 2 கன்னியாஸ்திரிகளும் அவர்களுடன் 2 பேரும் சென்றனர். அப்போது, அந்த 4 பேரையும்சூழ்ந்து கொண்டு சிலர் துன்புறுத்தி உள்ளனர். கன்னியாஸ்திரிகள் 2 பேரும் மத மாற்றம் செய்பவர்கள் என்றும் அவர்களுடன் சென்ற 2 பேரை மதமாற்றம் செய்யவே அழைத்து செல்வதாகவும் அவர்கள் சந்தேகப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ரயிலில் இருந்து 4 பேரையும் இறங்கும்படி அவர்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் ஜான்சி ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.

ஆனால், மதமாற்றம் செய்யவில்லை, தங்களுடன் உள்ள 2 பேர் கன்னியாஸ்திரி பயிற்சி பெறுபவர்கள் என்று 2 கன்னியாஸ்திரிகள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக 25 நிமிடங்கள் கொண்ட வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஜான்சி ரயில் நிலையத்தில் அவர்கள் விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் மதமாற்றம் செய்ய வந்தவர்கள் இல்லை என்பது நிரூபணமானது. அதன்பின் அவர்கள் தொடர்ந்துரயிலில் புரி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கன்னியாஸ்திரிகளை துன்புறுத்தியவர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுக்க தயங்குகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.