3 புரோட்டா சாப்பிட்டால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கும் ஓட்டல்

டில்லி:

3 புரோட்டா சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கும் ஓட்டல் குறித்த ருசிகர தகவல் வெளியாகியுள்ளது.

வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் 50 புரோட்டா சாப்பிட்டால் ரூ. 100 பரிசு வழங்கும் காட்சி இடம்பெற்றது. இந்த காமெடி காட்சி மூலம் நடிகர் சூரி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஒரு நிகழ்வு டில்லி அருகே உள்ள ஒரு ஓட்டலில் உண்மையிலேயே நடப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

டில்லியில்- ரோடாக் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது தபாஸ்யா புரோட்டா கடை. புரோட்டாவுக்கு இந்த ஓட்டல் பெயர் பெற்றது. இங்கு ரூ.180 முதல் ரூ.400 வரை புரோட்டா கிடைக்கும். இங்கு செய்யப்படும் 400 ரூபாய் புரோட்டா ஒன்று 2 கிலோ இருக்கும். இதில் 3 புரோட்டாவை 50 நிமிடங்களுக்குள் சாப்பிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.

மேலும், வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு இலவசமாக புரோட்டா வழங்கப்படும். ஆனால் 3 புரோட்டா சாப்பிட முடியாமல் போனால் சாப்பிட்ட வரையிலான பணத்தை வாடிக்கையாளர் கொடுத்துவிட வேண்டும். பலர் இதில் தோல்வி அடைந்துள்ளனர். மகராஜ் சிங், அஷ்வனி ஆகிய 2 பேர் மட்டுமே இதில் வெற்றி பெற்று ஒரு லட்சம் ரூபாய் பரிசை வென்றுள்ளனர். இதில் ஒருவர் 50 நிமிடங்களில் 4 புரோட்டா சாப்பிட்டுள்ளார்.