ஹாங்காங்: கடும் போராட்டங்களுக்கு மத்தியில் ஹாங்காங்கில் நடைபெற்ற மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் அதிக இடங்களில் வென்றிருக்கிறது.

மொத்தமுள்ள 452 இடங்களுக்கான தேர்தலில் ஆயிரத்து 90 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  71 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாக்களித்து உள்ளனர். 2015ம் ஆண்டின் போது, வாக்குச் சதவீதம் என்பது 47 சதவீதம் தான்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 18 மாவட்ட கவுன்சிலில், 452 இடங்களில் 368 இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அதில் 330 இடங்களில் ஜனநாயக ஆதரவு இயக்கம் வெற்றி பெற்றுள்ளது. சீன அரசு ஆதரவு வேட்பாளர்கள் 38 பேர் தான் வெற்றி பெற்றிருக்கின்றனர். ஹாங்காங்கை பொறுத்தவரை இந்த தேர்தல் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

அதற்கு காரணமும் இருக்கிறது. ஹாங்காங் அடிப்படையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாகும். அண்மையில் கைதிகள் ஒப்படைப்பு தொடர்பாக, சீனா கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு ஹாங்காங்கின் ஜனநாயக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சீன அரசை எதிர்த்து அவர்கள், போராட்டத்தில் குதித்தனர். 6 மாதங்களாக போராட்டம் நடைபெற்று அங்கு அமைதியற்ற நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இப்போது தேர்தல் நடைபெற்று இருக்கிறது. இந்த மாவட்ட கவுன்சில் தேர்தல் என்பது நமது ஊரில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கு ஈடானது என்பது குறிப்பிடத்தக்கது.