புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்திய ஆசிரியை, 4 கல்லூரி மாணவிகள் கைது!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாட்ஸ்அப்பில் கருத்து பதிவிட்ட கர்நாடக ஆசிரியை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். புல்வாமா தாக்குதலை ஆதரித்த 4 கல்லூரி மாணவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sedition

கடந்த 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரர்மரணமடைந்தனர். பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், உலக நாடுகள் அனைத்தும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்த புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிப்பதாக கூறினார். இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளுடன் இந்திய பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ராணுவ வீரர்கள் மீதும், துணை ராணுவப்படையினர் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதவராக கருத்து பதிவிட்ட ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் கடாபி சிவப்பூர் கிராமத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வாட்ஸ் அப்ப்பில் பாகிஸ்தானுக்கு ஆதர்வாக கருத்து தெரிவித்துள்ளார். தனது கருத்தை சிலருக்கு அந்த ஆசிரியை பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து ஆசிரியைக்கு எதிராக பலரும் கடும் கணடனத்தை தெரிவித்தனர். மேலும், ஆசிரியை வசித்து வந்த வீட்டை சிலர் தீயிட்டு கொளுத்தவும் முயற்சித்தனர்.

pulwama

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிரியையும் வீட்டை கொளுத்த முயற்சித்தவர்களையும் சர்ச்சை கருத்தை பதிவிட்ட அந்த ஆசிரியையும் கைது செய்தனர். இது தொடர்பாக பெலகாவி மாவட்ட எஸ்பி சுதீர் ரெட்டி கூறுகையில், “ பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அந்த ஆசிரியையின் பதிவு குறித்து மாலை 5 மணி அளவில் அறிந்தோம். அடுத்த சில மணிநேரத்தில் அந்த ஆசிரியை கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆசிரியை வீட்டை சிலர் தீயிட்டுக் கொளுத்த முயன்றனர். அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அந்த ஆசிரியை மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரிவு 124,124ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்” எனத் தெரிவித்தார்.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதவாக கருத்து தெரிவித்து கைதாகிய 2வது நபர் தான் இந்த ஆசிரியை. இதேபோன்று, ராஜஸ்தானில் புல்வாமா தாக்குதலை ஆதரித்த மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் சிலர் புல்வாமா தாக்குதலை நியாயப்படுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். இதனால் பாகிஸ்தானிற்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட 4 மாணவிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் 124 ஏ( இரு குழுக்கள் இடையே மோதலை ஏற்படுத்துதல் ), 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசத்திலும் புல்வாமா தாக்குதலை ஆதரித்து கரித்து தெரிவித்த 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மந்தனாப்பூர் பகுதியை சேர்ந்த ஒசாமா என்ற மாணவர் தனது பேஸ்புக் பக்கத்தில் புல்வாமா தாக்குதலை ஆதரித்து கருத்து வெளியிட்டார். இதனால் அவர் மீது 153ஏ-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.