டில்லி

பாஜக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மீது புகார்கள் வருவது அதிகரித்துள்ளது.

பல்கலைக்கழகத்துக்கு வேந்தர்களாக அந்தந்த மாநில ஆளுநர்களும்.  துணை வேந்தர்களாக அரசால் பரிந்துரைக்கப்படுபவர்களும் பதவியில் அமர்த்தப்படுவது வழக்கம்.    அதன் படி பாஜக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்வால் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜவகர்லால் கௌல் மீது நிர்வாகம் மற்றும் நிதி பங்கீடு குறித்து புகார் எழுந்தது.   மத்திய மனித வள மேம்பாட்டு விசாரணைக்குப் பின் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.    அதன் பிறகு  அலகாபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் ஹாங்லூ மீதும் புகார் எழுப்பப் பட்டு மனித வள மேம்பாட்டுத் துறை அவரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலம் மோதிஹரியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மீது புகார் எழுந்துள்ளது.    கடந்த 2014 ஆம் வருடம் தொடங்கப் பட்ட  இந்தப் பல்கலைக்கழகத்துக்கு அரவிந்த் குமார் அகர்வால் 2016ஆன் ஆண்டு துணை வேந்தராக நியமிக்கப் பட்டுள்ளார்.    இவர் பேராசிரியர் ஹரீஷ் சந்திர ராதோட் தலைமையில் அமைந்த ஒருவர் கமிஷனால் துணை வேந்தர் பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டவர்.     துணை வேந்தர்  பதவி ஏற்ற பின் தன்னை தேர்ந்தெடுத்த ஹரீஷ் சந்திர ராதோடின் மகன் சௌரப் சிங் ராதோட்டுக்கு  துணைப் பேராசிரியராக  அகர்வால் பதவி வழங்கி உள்ளார்.

இந்தப் பதவி உள்நோக்கத்துடன் வழங்கப்பட்டதாக தற்போது புகார் எழுந்துள்ளது.    அதைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.    அகர்வால் இந்தக் குற்றச்சாட்ட்டுக்களை மறுத்துள்ளார்.   அவர், “சௌரப் எழுத்துத் தேர்வில் மூன்றாம் இடத்தில் வந்துள்ளார்.   அவருக்கு இந்தப் பதவிக்கான கல்வித் தகுதிகள் உள்ளன.   தவிர நான் மட்டும் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை.   மற்றவர்களும் சேர்ந்து தான் இந்த தேர்வை நிகழ்த்தினோம்.    இதில் ஏதும் தவறு நடந்துள்ளதாக எனக்கு தோன்றவில்லை”  எனக் கூறி உள்ளார்.