புதுக்கோட்டை :

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியில், மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள்  இன்று காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலரது வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். நேற்று விஜபாஸ்கர் சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் சுமார் நான்கு மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கை வாசலில் உள்ள விஜயபாஸ்கருக்குச் சொந்தமான கல் குவாரியில் இன்று காலை முதல் மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

கடந்த 7ஆம் தேதி விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் விதியை மீறி குவாரியில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவது தெரியவந்தது. இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள், மத்திய பொதுப்பணித் துறைக்கு அறிக்கை அனுப்பினர். அதனடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக டெல்லியிலிருந்து  வந்த மத்திய பொதுப்பணித் துறை அதிகாரிகள் 10 பேர் காலை 7 மணிக்கு அதிரடியாக குவாரிக்குள் நுழைந்தனர். அங்குள்ள அலுவலகத்தில் பணியிலிருந்த ஊழியர்களிடம் குவாரியின் செயல்பாடுகள், கற்கள் வெட்டி எடுப்பது குறித்து விசாரித்தனர்.

மத்திய அரசு அதிகாரிகளின் இந்த அதிரடி சோதனையையொட்டி, குவாரியின் நுழைவுவாயிலில் பத்துக்கும்  மேற்பட்ட சி.ஆர்.பி.எப். போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.