வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம்: அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு

டில்லி:

பொதுமக்களின்  வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த உணவுத்துறை அதிகாரிகளுக்கு டில்லி முதல்வல்ர கெஜ்ரிவால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த மாநில கவர்னர் இடையூறாக இருந்து வந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மாநில அரசுக்கே அதிகாரம் என்று உச்சநீதி மன்றம் சிறப்புமிக்க தீர்ப்பை நேற்று முன்தினம் வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்த நிலையில், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், இந்த தீர்ப்பு  “டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும்,  ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி” என்றும் கூறியிருந்தார்.

மேலும் மக்கள் நலத்திட்டங்கள் உடனடியாக தொடரும் என்றும்,  டில்லி அரசு, இனி எந்தக் கோப்புகளையும் துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்காது. இனி எந்த வேலை நிறுத்தமும் நடைபெறாது என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, டில்லி மாநில அரசு சுறுசுறுப்பாக மக்கள் நலப்பணி தொடங்கி உள்ளது.

இந்த  நிலையில், பொதுமக்களின்  வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை உடனே செயல்படுத்த மாநில உணவுப்பொருட்கள் வழங்குதல் துறை  அதிகாரி களுக்கு முதல்வர் கெஜரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாநில அரசின்,  பொதுமக்களின்  வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி கோரிய கோப்பில், கடந்த சில மாதங்களாக  ஆளுநர் பைஜால், அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.