இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் திரையுலகினர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள்.அதன்படி ரஜினியும் பல்வேறு சங்கங்களுக்கு உதவி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் ரஜினிக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நலிவடைந்த தயாரிப்பாளர்களுக்கும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து ரஜினியும் 750 பேருக்கு உதவும் வகையில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். இது மிகவும் சர்ச்சையாகியுள்ளது .
நாம் முதலாளிகள், பலரும் நம்மிடம் சம்பளம் வாங்குகிறார்கள். நாம் எப்படி இவ்வாறு வரிசையில் நின்று வாங்கலாம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், சில தயாரிப்பாளர்களும் ரஜினியின் உதவிக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து வந்தார்கள்.
இதனிடையே இன்று (மே 7) காலை ‘6.2’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களில் ஒருவரான பழனிவேல் தயாரிப்பாளர் சங்கத்துக்குச் சென்று கடும் வாக்குவாதம் செய்தார். ரஜினி கொடுத்த பொருட்களை எப்படி வரிசையில் நின்று வாங்கலாம் என்று கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து பழனிவேல் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
“ரஜினியின் பெயரைச் சொல்லி கே.ராஜன் சார், நமக்கு எல்லாம் அரிசி கொடுக்கிறேன் என்று காறித் துப்பிவிட்டார். நாம் சுமார் 150 ஆட்களுக்கு முதலாளி. நாமெல்லாம் அரிசி வாங்கலாமா?. வெறும் 850 ரூபாய் பெறுமானம் உள்ள பொருட்களை நமது கே.ராஜன், ரஜினி பெயரைச் சொல்லி தயாரிப்பாளர் சங்கத்தை அசிங்கப்படுத்திவிட்டார். எந்தத் தயாரிப்பாளர் அரிசி இல்லை என்று கேட்டார். நாம் எல்லாம் முதலாளிகள். இப்போது தான் தயாரிப்பாளர் சங்கத்தில் போய் திட்டிவிட்டு வருகிறேன். இந்த அரிசியை வாங்குபவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களே அல்ல”.
இவ்வாறு பழனிவேல் தெரிவித்துள்ளார்.