நஷ்டத்தை ஏற்படுத்தும் நடிகர்கள்!: ஞானவேல்ராஜா கண்டனம்

விஜய் ஆண்டனி நடிக்கும் அண்ணாதுரை படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சில நடிகர்கள் மீது தனக்கு இருக்கும் ஆத்திரத்தைக் கொட்டிவிட்டார் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும்  இந்தப்  படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் அண்ணாதுரை படத்தின்  இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

அபிராமி ராமநாதன் பேசும்போது, “நான் பேரறிஞர் அண்ணாதுரையின் தீவிர ரசிகன். அந்த பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இந்த படத்தை நானும் வாங்கியிருக்கிறேன்” என்று புது விளக்கம் கொடுத்தார்.

பாக்யராஜ், சரத்குமார், ராதிகா சரத்குமார்.,  காட்ரகட்டா பிரசாத்,  தனஞ்செயன், கிருத்திகா உதயநிதி என பலர் பேசினார்கள்.

உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “அண்ணாதுரைனு தலைப்பு வைத்திருக்கிறீர்கள். வருமானவரித்துறை சோதனை வரப்போகுது. அதோடு, , தலைப்பை மாற்ற வேண்டும் என்று கூறி சிலர் வரலாம், எச்சரிக்கையாக இருங்கள்” என்றார் கிண்டலாக.

ஞானவேல் ராஜா பேசும்போது நடிகர்களை எச்சரிக்கும் விதத்தில்  பேசினார்.

“ஒவ்வொரு விஷயத்திலும் விஜய் ஆண்டனி தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறி வருகிறார். அவருக்குப் பாராட்டுக்கள்.

ஆனால் இதே தமிழ்த் திரையுலகில் ஒரு சில நடிகர்கள் சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

ஒரு நடிகர் 29 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார். எடுத்தவரை போதும்.. படத்தை வெளியிடுங்கள் என்கிறார்.  அந்த நடிகரால் தயாரிப்பாளருக்கு 18 கோடி நஷ்டம்!

இதே போல ஒரு பிரபல காமெடி நடிகரும் அந்த புகாரில் சிக்கி, தயாரிப்பாளர்களை டார்ச்சர் செய்து வருகிறார்.

அப்படிப்பட்ட சில நடிகர்கள் இருக்கும் இந்த திரைத்துறையில்  விஜய் ஆண்டனி போல, இரவு பகலாக உழைக்கும் நடிகர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மனதுக்காகவே படம் பெரிய வெற்றி பெறும்: என்று பேசி முடித்தார் ஞானவேல்ராஜா.