துரை

ன்புச் செழியனால் 2011 ஆம் வருடம் மிரட்டப்பட்ட தயாரிப்பாளர் தங்கராஜ் தற்போது அவருக்கு எதிராக பேட்டி அளித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் வருடம் அனைத்துச் செய்தித்தாள்களிலும் விதம் விதமான தலைப்புக்களில் அன்புச் செழியன் பற்றிய செய்திகள் உலா வந்துக் கொண்டிருந்தது.  டிசம்பர் மாதம் 2 ஆம் தேதியிட்ட நாளிதழ்களில்  “ஃபைனான்சியர் பண மோசடி செய்ததால் கைது”  “பிரபல ஃபைனான்சியர் மதுரை அன்பு கைது” “திரைப்பட ஃபைனான்சியர் கொலை செய்ய முயன்றதாக கைது”  ஆகியவை போல தலைப்புக்களில் செய்திகள் வெளியாகின.  அப்போது அன்புச் செழியனின் கைது திரைப்பட மற்றும் அரசியல் வட்டாரங்களை உலுக்கியது.

மீசை மாதவன், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களின் தயாரிப்பாளர் தங்கராஜ்.  இவர் 2004 ஆம் வருடம் ஃபைனான்சியர் அன்புவிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அவர் அதற்கு வட்டியாக மட்டும் ரூ, 1 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார்.  படங்கள் தோல்வியுற்றதால் மேற்க்ண்டு வட்டிக்காக அவருடைய நிலத்தின் பத்திரங்களை அன்பு பிடிங்கிக் கொண்டுள்ளார்.  அது தவிர முதல் திருப்பித் தரவில்லை எனக் கூறி அடிக்கடி அவரை அன்புவின் அடியாட்கள் மிரட்டி வந்துள்ளனர்.  இது தாங்க முடியாமல் போகவே தங்கராஜ் போலீஸ் உதவியை நாடி அன்புவை போலீஸ் கைது செய்துள்ளது.

அன்புவை கைது செய்ததால் இனி தனக்கு மன உளைச்சல் இருக்காது என நினைத்து தங்கராஜ் நிம்மதி அடைந்தார்.  ஆனால் இரு வருடங்களுக்குப் பின் தங்கராஜ் தனது புகாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக செய்தி வந்தது.  செய்தியுடன் வந்த புகைப்படத்தில் அன்புவின் வழக்கறிஞர் மற்றும் தங்கராஜ் அமர்ந்திருப்பதாக காணப்பட்டது. தற்போது அசோக் குமார் தற்கொலைக்குப் பின் இது பற்றி தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார்.

அவர் தனது பேட்டியில், ”நான் வாங்கிய ரூ 20 லட்சம் கடனுக்கு வட்டிக்காக ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலத்தின் பத்திரத்தை பிடிங்கிக் கொண்டுள்ளனர்.  அதனால் இன்று வரை என்னால் அசலை செலுத்த முடியவில்லை.  எனது நிலத்தின் பத்திரத்தை திரும்பப் பெற தமிழ்நாடு முழுதுமுள்ள பல காவல் நிலையங்களில் புகார் அளித்தேன்.  வாங்க அனைவரும் மறுத்தனர்.  கடைசியாக மதுரையில் எனக்கு உள்ள வேறு சில சொத்துக்களை பார்வையிட சென்ற போது மதுரை காவல் சுப்பிரண்டிடம் புகர் அளித்தேன்.  அதைத் தொடர்ந்து அன்பு கைது செய்யப்பட்டார்.

ஆனால் உடனடியாக மதுரை காவல் நிலையத்துக்கு பல இடங்களில் இருந்தும் ஃபோன் கால்கள் குவிய ஆரம்பித்தன. ஆளும் கட்சியில் இருந்த தேவர் இனத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதி நேரடியாகவே காவல் துறை அதிகாரியிடம் பேசி உள்ளார்.  அரசியல்வாதியாக மாறி உள்ள ஒரு நடிகர் நேரிலேயே வந்து விட்டார்.  அது தவிர போலிசாரே என்னை மிரட்டிய கொடுமையும் நடந்தது.  ஆனால் நான் தொடர்ந்து போராட தீர்மானித்தேன்.

அப்போது இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி பணி மாற்றம் செய்யப்பட்டு சென்று விட்டார்.  அதன் பின் அனைத்து போலீசாரும் எனக்கு எதிராகி விட்டனர்.  பல வகையிலும் மிரட்டலுக்கு மேல் மிரட்டல் வரவே நானும் பயந்து போனேன்.  எனக்கு இரு மகள்கள் இருக்கின்றனர்.  எனவே நான் பயந்து போய் புகாரை திரும்பப் பெறுவதாக எழுதிக் கொடுத்து விட்டேன்.  மேலும் ஒருமுறை அன்பு என்னிடம் கருணாநிதியின் மகன் அழகிரி தனக்கு ஆதரவாக உள்ளவர் எனக் கூறி உள்ளார்.  அனைத்துக் கட்சியிலும் அன்புவுக்கு ஆதரவு உள்ளது.

இப்போது அசோக் குமார் தற்கொலை செய்தது ஒதுங்கிச் சென்ற என் மனதை மாற்றி விட்டது. இனி நான் அன்புச் செழியன் சிறை செல்லும் வரை என் போராட்டத்தை தொடருவேன்” எனக் கூறி உள்ளார்.

அசோக் குமாரின் தற்கொலைக் கடிதத்தில், “பல பெரும் புள்ளிகள் அன்புவுக்கு ஆதரவாக உள்ளதால் என்னால் அவரை எதிர்க்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.  பா ம க தலைவர் ராம்தாஸ் தனது அறிக்கையில் தர்ம யுத்தம் செய்யும் ஒரு தலைவர் அன்புவின் பின் உள்ளதாக கூறி உள்ளார்.  அவர் அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும் அவர் கூறும் போது ஓ பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தாம் தர்மயுத்தம் நடத்துவதாக கூறியதை சமூக ஆர்வலர்கள் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்