கூடங்குளம் அணு மின் உலையில் மீண்டும் உற்பத்தி பாதிப்பு
கூடங்குளம்
கூடங்குளம் அணு மின் உலையில் பழுது காரணமாக மீண்டும் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகில் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ள்ளது. இந்த அணு மின் நிலையத்தில் முதல் அணு உலை கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் எரி பொருள் மாற்றவும் பராமரிப்பு பணிகளுக்காகவும் நிறுத்தப்பட்டது.
அடுத்த நாள் 2 ஆம் அணு மின் உலையில் வால்வில் பழுது ஏற்பட்டது. அதை சரி செய்ய அந்த உலையும் நிறுத்தப்பட்டதால் மின் உற்பத்தி முழுவதுமாக நின்று போனது. கடந்த 19 ஆம் தேதி மாலை 2 ஆம் உலை பழுது பார்க்கும் பணி முடிந்து மின் உற்பத்தி தொடங்கியது.
அந்த உலையின் உற்பத்தி சிறிது சிறிதாக அதிகரிக்கபட்டது. நேற்று காலை அந்த இரண்டாம் அணு மின் உலை 600 மெகாவாட் மின் உற்பத்தியை அடைந்தது. அப்போது அந்த உலையில் நேற்று மாலை 5.45 மணிக்கு மீண்டும் வால்வில் பழுது ஏற்பட்டது.
ஆகவே உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கூடங்குளம் மின் உற்பத்தியில் இருந்து தமிழகத்துக்கு 1124 மெகவாட் மின்சாரம் கிடைத்து வந்தது குறிப்பிடத்தக்கது