நிர்மலாதேவி வழக்கு: 6 மாதத்திற்குள் முடிக்க மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை:

ருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியர் மீதான வழக்கு 6 மாதத்திற்குள் முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பு விடுத்த விவகாரம் தொடர்பான வழக்கை, செப்டம்பர் 24 ந்தேதி முதல்  முதல் ஆறு மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு மதுரை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடையவரும், தற்போது சிறையில் இருப்பவருமான, மதுரை பல்கலைக் கழக  ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, தன்னை  ஜாமீனில் விடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தும்,  இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் ஜூலை 16 ஆம் தேதிக்குள் முதல் குற்றபத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும்  உத்தரவிட்டது.

மேலும், சிபிசிஐடி காவல்துறையினர், செப்டம்பர் 10ம் தேதிக்குள் இறுதி குற்றப் பத்திரிக்கையை உரிய நீதிமன்றத்தில்  தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விசாரணை நீதிமன்றம்,செப்டம்பர் 24 ம் தேதியில் இருந்து 6 மாதத்திற்குள் இந்த வழக்கினை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.