சென்னை:

ருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் நியமனம் செய்துள்ள விசாரணை கமிஷன் அதிகாரி சந்தானம், மதுரை விருந்தினர் மாளிகையில் 3 நாட்கள் விசாரணை நடத்த இருப்பதாக கூறி உள்ளார்.

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 21, 25, 26 ம் தேதி ஆகிய 3 நாட்களிலும் மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் காலை 10 மணி முதல் பகல் 1.30 வரை நேரில் ஆஜராஜி எழுத்துப்பூர்வமாக தகவல் தரலாம் என்றும் ஆளுநர் நியமனம் செய்துள்ள விசாரணை கமிஷன் அதிகாரி சந்தானம் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே, பெண்கள் சம்பந்தமான இந்த விசாரணையில், பெண் அதிகாரி நியமிக்கப்படாமல் ஆண் அதிகாரியை விசாரணை அதிகாரியாக கவர்னர் நியமனம் செய்தது தவறு என்று கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சந்தானத்துக்கு உதவும் வகையில் பெண் அதிகாரி ஒருவரையும் ஆளுநர் நியமனம் செய்துள்ளார்.

கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியை கமலி சந்தானந்துக்கு உதவியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரும்  தேவையான  விசாரணையை  நடத்துவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று விசாரணைக்காக மதுரை வந்துள்ள சந்தானம், மதுரை காமராஜர் பல்கலை பதிவாளர் சின்னையாவிடம்  விசாரணை நடத்திய நிலையில் நிர்மலா தேவி குறித்து தகவல் தெரிந்தவர்கள் தெரிவிக்கலாம் என அறிவித்து உள்ளார்.