பாம்பு பிடி வீரர்களுக்கு அமெரிக்காவில் மீண்டும் மவுசு

ப்ளோரிடா:

அமெரிக்காவின் தெற்கு ப்ளோரிடாவில் எவர்கிளேட்ஸ் என்ற வன உயிரின பூங்கா ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. அலையாத்தி காடுகளை கொண்ட இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வன உயிரினங்கள் வசித்து வருகின்றன. இந்த பூங்காவில் தற்போது மலை பாம்புகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது.

இவை ‘‘பூங்காவில் இருக்கும் அரிய வகை வன உயிரினங்களை இரையாக்கிவிடுகிறது. பர்மா வகையை சேர்ந்த இந்த மலைபாம்புகள் தங்களது சொந்த நாட்டின் வன உயிரினங்களை அழித்து வருவது அங்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது என்று வன உயிரின காப்பாளர் மற்றும் ஊர்வன வல்லுனர் ஜோ வாசிலேவ்ஸ்கி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘ மலைபாம்புகளை தேடி பிடித்து கொல்வது பெரும் கடினமாக இருக்கிறது. அதனால் மலைபாம்புகளை பிடித்து அழிக்க பாம்பு பிடிக்கும் வல்லுனர்கள் 25 பேரை பணியமர்த்த அந்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு லட்சத்து 75 ஆயிரம் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த புதிய திட்டத்தின் மூலம் 4 அடி நீளம் கொண்ட ஒரு மலைபாம்பை பிடித்து கொல்ல 50 டாலர் வழங்கப்படும். அதற்கு மேல் அதிகரிக்கும் பாம்பின் நீளத்திற்கு ஏற்ப ஒரு அடிக்கு கூடுதலாக 25 டாலர் வழங்கப்படும். மேலும், கூண்டுகளில் முட்டைகளுடன் கூடிய ஒரு பாம்பை பிடித்தால் 100 டாலர் வழங்கப்படும். ஒரு ஆண்டில் ஒவ்வொரு பாம்பு பிடி வீரரும் 100 பாம்புகள் பிடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

இந்தியாவை சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான மாசி சடையன் மற்றும் வடிவேல் கோபால் என்ற 2 மலைவாழ் இருளர் இனத்தை சேர்ந்தவர்களை ப்ளோரிடா மீன் மற்றும் வன உயிரின காப்பகம் அழைத்து வந்து பாம்புகளை பிடித்து வெற்றி கண்டுள்ளது.
இதை அடிப்படையாக கொண்டு இந்த புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது. வளர்ப்பு பிராணிகளை அலட்சியமாக விட்டுவிட்ட உரிமையாளர்களால் மலைபாம்புகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துவிட்டது. ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி டேட் நகரில் அனுபவம் குறைவான வேட்டைக்காரர்களை கொண்டு பாம்புகள் பிடிக்கப்பட்டு வருகிறது.

பாம்புகளை கொன்றோ அல்லது உயிருடனோ பிடித்து வந்து அதன் தோல், கறியை விற்பனை செய்து லாபம் பார்க்கும் நோக்கில் இந்த வேட்டைக்காரர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.